அவிநாசி என்பதற்கு அழிவு இல்லாதது என்று பொருள்.
மூலவர் 'அவிநாசியப்பர்' என்னும் திருநாமத்துடன், பெரிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'கருணாம்பிகை' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.
இத்தலத்தில் சுவாமி சன்னதி மற்றும் அம்மன் சன்னதி நடுவில் முருகப் பெருமான் சன்னதி உள்ளதால் இது சோமாஸ்கந்த வடிவம் என்று அழைக்கப்படுகிறது.
கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தேவசேனை சமேத சுப்ரமண்யர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, 63 நாயன்மார்கள், மகாவிஷ்ணு, ஆஞ்சநேயர், சூரியன், சனீஸ்வரன், பைரவர் ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.
சுந்தரர் இத்தலத்தில் முதலை விழுங்கிய சிறுவனை மீண்டும் உயிர்ப்பித்து அவனது பெற்றோர்களிடம் சேர்த்தார். ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழாவின்போது 'முதலைவாய்ப்பிள்ளை உற்சவம்' நடைபெறுகிறது.
காசியில் வாசி அவிநாசி என்று இப்பகுதியில் உள்ளோர் கூறுவர். அதாவது காசியினும் வீசம் (1/16 பங்கு) உயர்ந்தது அவிநாசி என்று பொருள்.
அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.
சுந்தரர் ஒரு பதிகம் பாடியுள்ளார். மாணிக்கவாசகர் தமது திருவாசகத்தில் இத்தலத்தைப் பாடியுள்ளார்.
இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|